நீட் வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - தற்கொலை செய்த மாணவியின் தாயார் வேண்டுகோள்

மகளின் மறைவுக்குப் பிறகு, அவரது தந்தைக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுத் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கையில் மகள் ஆகான்ஷாவின் படத்துடன் தாய் நீலம்
கையில் மகள் ஆகான்ஷாவின் படத்துடன் தாய் நீலம்
Published on

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இருப்பினும், இது மட்டும் போதாது என்றும் வினாத்தாள் கசிவுக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று நீட் தேர்வு மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்கொலை

மகாராஷ்டிராவின் நாக்பூரில் படித்து வந்த 18 வயது மாணவி அகான்ஷா சதுர்வேதி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பால் மன உளைச்சலடைந்து கடந்த மே 20 அன்று தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகான்ஷாவின் தாயார் நீலம் சதுர்வேதி,

"எந்த ஒரு நடவடிக்கையும் என் மகளை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. கல்வி அமைச்சரின் ராஜினாமாவில் எங்களுக்கு எந்தத் திருப்தியும் இல்லை.

மாணவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரு அமைச்சர் ராஜினாமா செய்வதால் மட்டும் அவரது பொறுப்பு முடிந்துவிடாது. வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை மட்டுமே வழங்கப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

குடும்பம்

மத்திய பிரதேசத்தை ஆகான்ஷாவின் குடும்பம் மகளின் மருத்துவக் கனவுக்காக நாக்பூருக்குக் குடிபெயர்ந்தது. தந்தை ஒரு சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டே, மகளின் பயிற்சி வகுப்புக் கட்டணத்திற்காக நாக்பூரில் சமையல் வேலையும் செய்து வந்தார்.

மகளின் மறைவுக்குப் பிறகு, அவரது தந்தைக்கு இருமுறை மாரடைப்பு ஏற்பட்டுத் தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள நீளம், "என் மகள் உயிருடன் இருந்திருந்தால் குடும்பத்தை அவளே காப்பாற்றியிருப்பாள். இனி எங்களை யார் கவனிப்பார்?" என கண்ணீர் வடித்துள்ளார்.

தற்கொலைக் குறிப்பு

நீட் தேர்வில் 650-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்த அகான்ஷா, தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

அவரது தற்கொலை குறிப்பில்,

"அம்மா, அப்பா, உங்கள் மகள் நன்றாகப் படித்து டாக்டர் ஆவாவாள் என்று நீங்கள் நம்பினீர்கள். ஆனால் மீண்டும் நீட் தேர்வு எழுத எனக்குத் தைரியம் இல்லை.

முதல் முறையில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுத்திப்பேன், ஆனால் மறுத்தேர்வில் மீண்டும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, அப்பா... நான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன்" என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் இதுவரை நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com