கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த எம்.எல்.ஏ.

பிரசவத்திற்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அழகான ஆண் குழந்தை பிறந்தது.
கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த எம்.எல்.ஏ.
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், தும்முகுடேம் மண்டலம், டபிள்யூ ரெகுபள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்னா. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்திற்காக பத்ராச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

நேற்று ஸ்வப்னாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. பிரசவம் பார்ப்பதற்கு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. இதனால் அவர் பிரசவ வலியால் கதறி துடித்தார்.

இதனைக் கண்ட அவரது உறவினர்கள் இதுகுறித்து தெள்ளம் எம்.எல்.ஏ. டாக்டர் வெங்கட்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த எம்.எல்.ஏ. வெங்கட்ராவ் ஸ்வப்னாவை பரிசோதித்தார். அப்போது ஸ்வப்னாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே பிரசவம் பார்க்க முடியும் என்பதை அறிந்து அவரது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஸ்வப்னாவை ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்து எம்.எல்.ஏ. குழந்தையை வெளியே எடுத்தார்.

ஸ்வப்னாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்த எம்.எல்.ஏ வெங்கட்ராவுக்கு ஸ்வப்னாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com