

பிரதமர் மோடியின் வீடியோ பேஸ்புக்கில் தற்காலிகமாக நீக்கப்பட்டது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பியும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பக் குழுத் தலைவர் நிஷிகாந்த் துபே எச்சரித்துள்ளார்.
தேர்வு வினாத்தாள் கசிவு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசிய வீடியோ, பேஸ்புக் பக்கத்தில் இருந்து சுமார் 5 மணி நேரம் நீக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறால் இது நடந்ததாக மெட்டா விளக்கம் அளித்தது.
நாடாளுமன்றக் குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, யூடியூப், எக்ஸ், ஸ்னாப்சாட், கூகுள் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மத்திய உள்துறை மற்றும் ஐடி அமைச்சக அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக 10 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்திற்காக மெட்டா பிரதிநிதிகள் மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாகக் கூறியபோதிலும், இந்த மன்னிப்பை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கே நேரடியாக கேட்க வேண்டும் என நிஷிகாந்த் துபே வலியுறுத்தியுள்ளார்.
ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கேட்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79ன் கீழ் சமூக ஊடகங்களுக்கு அளிக்கப்படும் 'பாதுகாப்பு அந்தஸ்து' திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அந்தஸ்து இருந்தால் மட்டுமே பயனாளர்களின் பதிவுகளுக்குத் தளம் சட்டப்பூர்வமாகப் பொறுப்பேற்கத் தேவையில்லை எனும் விலக்கு அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும்.
அமைதியை சீர்குலைக்க சதி
தூபே இதுகுறித்து பேசுகையில், "2024 இந்திய தேர்தல் முடிவுகள் குறித்து கடந்த ஜனவரியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பின்னர் மன்னிப்பு கேட்ட ஜுக்கர்பெர்க், தற்போது பிரதமரின் வீடியோவை நீக்கியுள்ளது இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தையே காட்டுகிறது" என்று சாடியுள்ளார்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் மொத்த Viewership, 23 மில்லியனாக மட்டுமே இருக்கும் நிலையில், பதிவு செய்யப்படாத அமைப்புகள் மற்றும் புதிய கணக்குகளின் பார்வைகள் 27 மில்லியனாக செயற்கையாக உயர்த்தப்படுவதாக மெட்டா, யூடியூப் மற்றும் எக்ஸ் தளங்களின் அல்காரிதம் மீது குற்றம் சாட்டினார்.