

மகாராஷ்டிராவில் வாகனம் கிணற்றுக்குள் பாய்ந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூர் தாலுகா ரஞ்சனி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து வீட்டினர் என மொத்தம் 15 பேர் ஒரு பிக் அப் வாகனத்தில் சதாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சித்தநாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
தரிசனம் முடிந்து அவர்கள் மீண்டும் தங்களது கிராமத்திற்கு பந்தர்பூர்-மஸ்வத் நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை 5 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வாகனம் தாண்டல்வாடி கிராமத்திற்கு அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் தலைகுப்புற பாய்ந்தது.
பயணிகள் அலறிய சத்தம் கேட்டு, அந்த வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகளும், தாண்டல்வாடி கிராம மக்களும் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
உள்ளூர் மக்களின் துரிதமான நடவடிக்கையால் கிணற்று நீருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த 7 பேர் உடனடியாக உயிருடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பந்தர்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், வாகனத்தின் 6 மாதக் குழந்தை உட்பட 4 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிணற்றிற்கு முறையான பாதுகாப்புச் சுவரோ அல்லது தடுப்பு வேலிகளோ அமைக்கப்படாததே இந்த விபரீதத்திற்குக் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசின் சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.