சத்தீஸ்கரை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் செயற்கை பன்னீருக்கு தடை

தடையை மீறுபவர்களுக்கு 6 மாதம் முதல் ஆயுள் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படலாம்.
paneer
Published on

மகாராஷ்டிராவில் அனலாக் பன்னீர் எனப்படும் செயற்கை பன்னீரின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ.க – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

தரமற்ற பன்னீர்

அங்குள்ள உணவகங்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் இந்த செயற்கை பன்னீரை நுகர்வோருக்குத் தெரியாமல் உண்மையான பன்னீராகப் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. உணவு பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வில் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவை தரமற்றவை என தெரிய வந்தது.

இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஆயுள் சிறைத்தண்டனை வரை விதிக்கப்படலாம். மேலும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக, மகாராஷ்டிர மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

மாநிலம் முழுதும் பெரும்பாலான உணவு விடுதிகள், ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல், பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர் எனக்கூறி, அனலாக் பன்னீரை வழங்குவதாக எங்களுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.

ஓராண்டு தடை

இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். அனலாக் பன்னீரில் புரதச்சத்து மிகக் குறைவு. உடல் நலனுக்கும் கேடு. எனவே, அடுத்த ஓராண்டுக்கு அனலாக் பன்னீரை உற்பத்தி செய்யவும், பதப்படுத்தவும், தயாரிக்கவும், வினியோகிக்கவும், மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் விற்கவும் ஓராண்டு தடை விதிக்கப்படுகிறது.

இதை மீறுவோருக்கு விளைவுகளின் தீவிரத்தைப் பொறுத்து தண்டனை வழங்கப்படும். குறைந்தபட்சம், 6 மாத சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மரணத்தை விளைவிக்கும் சந்தர்ப்பங்களில் ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சத்தீஸ்கரில் செயற்கை பன்னீருக்கான தடை அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com