போராட்டக்காரர்கள் மீதான தடியடி - விசாரணைக்கோரி பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!

நாட்டின் பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் மீதான தடியடி - விசாரணைக்கோரி பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கடிதம்!
Published on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் சமீபத்தில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான் பூச்சி கட்சி ஜூன்.20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவருகிறது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான்று (ஜூலை.20), "சலோ சன்சத்" என்ற பெயரில் பேரணியை நாடாளுமன்றம் நோக்கி முன்னெடுத்தனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நுழைவதை தடுத்து நிறுத்த எண்ணற்ற காவலர்கள் அதன் வளாகம் மற்றும் வெளிப்பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்கள் தொடர்ந்து நாடாளுமன்றப் பகுதியை நெருங்கியநிலையில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காவலர் சீருடைகள் அணியாத பலரும் கையில் தடியுடன் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகைகுண்டு, பெல்லாட் துப்பாக்கி போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் விகாஸ் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் சன்சத் மார்க் பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, காவல்துறையினர் எவ்வித தூண்டுதலும் இன்றி நடத்திய தடியடி குறித்து முறையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என விகாஸ் சிங் கோரியுள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும், நாட்டின் ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com