கர்நாடகா முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீது ஊழல் வழக்குப்பதிவு

கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்துவருகிறது. அங்கு முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடியூரப்பா
எடியூரப்பா
Published on

பெங்களூரு:

கர்நாடகாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 2008 - 10ல் எடியூரப்பா முதல் மந்திரியாக இருந்தபோது, அவர்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்தன. இதில் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம், ரூ.12 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைப் பற்றி விசாரணை நடத்தும்படி பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரஹாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும். நவம்பர் 2-க்குள் அறிக்கை அளிக்கவேண்டும் என லோக் ஆயுக்தா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மக்கள் பிரதிநிதிதிகள் சிறப்பு நீதிமன்றம் 14-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் பி.டி.ஏ. குடியிருப்பு கட்டிட திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், சசிதர் மரடி, சஞ்சய், சந்திரகாந்த், கட்டுமான நிறுவன அதிபர் ராமலிங்கம், பிரகாஷ், ரவி உள்ளிட்டோர் மீது பெங்களூரு லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்காக எடியூரப்பா, விஜயேந்திரா, மந்திரி சோமசேகர் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராக கூறி லோக் அயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். லோக் ஆயுக்தா போலீசார் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்திருப்பதால் அவருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உண்டாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com