

மத்திய அரசு தனது கொள்கை மற்றும் சித்தாந்தத்திற்கு உடன்படுபவர்களை மட்டுமே நீதிபதிகளாக நியமித்து வருவதாகவும் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மூன்றாம் பாலின வழக்கறிஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக மேனகா குருசுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான மேனகா குருசுவாமி இந்தியாவின் முதல் LGBTQ+ பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
தன்னை வெளிப்படையாக ஓரினச்சேர்க்கையாளர் என அறிவித்த மேனகா நேற்று மாநிலங்களவையில் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்தினார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 33ல் இருந்து 37 ஆக உயர்த்தும் மசோதா மீதான விவாதத்தில் பேசிய அவர் "நான் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக சில அனுபவங்களுடன் பேசுகிறேன். அவசரச் சட்டம் பிறப்பித்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் 4 நீதிபதிகளை அதிகரிப்பதன் மூலம் மட்டும் நீதித்துறையின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.
நீதித்துறையில் பெண்களை மத்திய அரசு நியமிக்காது; ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை நியமிக்காது; மதச் சிறுபான்மையினரை நியமிக்காது; தன்பாலினத்தவர்களை நீதித்துறையில் நியமிக்காது.
உங்கள் கருத்தியலோடு ஒத்துப்போபவர்களை மட்டுமே நீங்கள் நீதிபதிகளாக நியமிக்கிறீர்கள், அதுவே இங்குள்ள பிரச்சினை.
உயர் நீதிமன்றங்களில் 30 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளில் பெண்கள் 14 சதவீதம் மட்டுமே உள்ளனர்.
பட்டியலினத்தவர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் பெண்கள் அனைவரும் சேர்த்து நீதித்துறையில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர்.
2018 முதல் 2026 வரை, இந்த அரசு 3 சதவீத பட்டியலின நீதிபதிகளையும், 2 சதவீத பழங்குடியினநீதிபதிகளையும், 12 சதவீத OBC நீதிபதிகளையுமே நியமித்துள்ளது.
இது மேலும் நான்கு நீதிபதிகளைக் கொண்டுவருவதைப் பற்றியது அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளின்படி செயல்படும் போதே நீங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்." என்றார்.
2018-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ( இயற்கைக்கு மாறான உறவு) என்பதில் இருந்து தன்பாலின சேர்க்கையை நீக்கி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.
இந்த தீர்ப்பின் மூலமே, இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்உறவு சட்டப்பூர்வமானதாக மாறியது.
இந்த வழக்கில் மனு மானுதாரருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர்களில் மேனகாவும் ஒருவர்.
இந்த தீர்ப்பிற்கு பிறகு, தனது சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
தன்பாலின திருமண அங்கீகாரம் தொடர்பான பல வழக்குகளிலும் அவர் வாதிட்டுள்ளார்.
ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் தனது எல்.எல்.எம். முடித்த மேனகா குருசாமி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரோட்ஸ் ஸ்காலர் ஆவார்.
2019 ஆம் ஆண்டு டைம் பத்திரிகை அறிவித்த உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இவரும் ஒருவர்.