

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்துகிறது.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் முன்மொழிந்த இந்த மசோதா, 1956-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற சட்டத்தை மாற்றியமைக்கிறது.
வழக்குகளை விரைவில் முடிக்கவேண்டும் என்ற முக்கிய காரணத்திற்காக இந்த மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த கூடுதல் நீதிபதிகளுக்கான ஆண்டுச் செலவு ரூ.10.57 கோடி எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் அலுவல் இல்லங்கள் மற்றும் கார் என ஒருமுறை செலவு ரூ.3.47 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
1950-ல் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டபோது, தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1956-ல் 11 ஆகவும், 1960-ல் 14 ஆகவும், 1977-ல் 18 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. 1979-ஆம் ஆண்டின் இறுதி வரை அமைச்சரவையால் நீதிபதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது.
பின்னர், அப்போதைய தலைமை நீதிபதியின் வேண்டுகோளின் பேரில் அந்தக் கட்டுப்பாடு விலக்கிக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, 1986-ல் 18-லிருந்து 26 ஆகவும், 2009-ல் 26-லிருந்து 31 ஆகவும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.