

புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் பா.ஜ.க, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேருக்கு நேர் மல்லுகட்டுகின்றன.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் இரு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதி நடந்தது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த 2வது கட்ட தேர்தலில் 68.01 சதவீதம் வாக்குகள் பதிவானது என்றும், மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் 62.05 சதவீதம் வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.