

ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று ஜார்க்கண்ட் சட்டமன்றம் கூடும் நிலையில், மாணவர்கள் அறிவித்தபடி சட்டமன்றம் நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர்.
மத்திய படையினர், போலீசார் முன்னரே தயார் நிலையில் நிறுத்தப்பட்டு மாணவர்களை தடுக்க பேரிகேட் தடுப்புகள் நிறுவப்பட்டன.
இந்நிலையில் ராஞ்சியில் உள்ள பழைய சட்டமன்றக் கட்டிடத்தில் இருந்து புதிய சட்டமன்றக் கட்டிடத்தை நோக்கிப் போராட்டத்தில் ஈடுபட்ட திரளான மாணவர்கள் பேரணியாகச் சென்றனர்.
அப்போது காவல்துறை அமைத்திருந்த பாதுகாப்புத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மாணவர்கள் முன்னேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அசம்பாவிதங்களைத் தடுக்கக் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் மாணவர்கள் தடுப்புகளை தாண்டி பேரணியை தொடரும் முனைப்பில் அணுவகுத்து சென்று கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, முதல்வர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்திய பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை மாநிலக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.
மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தேவையின்றி காலந்தாழ்த்தி வருவதாக பாபுலால் மராண்டி சாடினார்.
JPSC, JSSC மற்றும் CGL தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மாநில அரசு முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னதாக போராட்டக்குழு பிரதிநிதிகளுடன் ஜார்கண்டின் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோச்சா அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் சர்ச்சைக்குரிய 14வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய நேற்று உடன்பாடு எட்டப்பட்டது. மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து JPSC ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.
அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.
மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், சிபிஐ மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.