

ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் (JPSC) நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
லோக் பவன் வெளியிட்ட அறிக்கையின்படி, அஜிதா பட்டாச்சார்யா, அனிமா ஹன்ஸ்டா மற்றும் ஜமால் அகமது ஆகியோரின் ராஜினாமாவை ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் ஏற்றுக்கொண்டார்.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.ஐ.டி. (CID) இந்த முன்று உறுப்பினர்களுக்கும் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து இந்த ராஜினாமாக்கள் நிகழ்ந்துள்ளன.
ஜே.எம்.எம். (JMM) கட்சியின் தலைவர் சுப்ரியோ பட்டாச்சார்யாவின் மனைவியான பட்டாச்சார்யாவிடம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியும், அகமதுவிடம் ஆகஸ்ட் 12-ஆம் தேதியும், ஹன்ஸ்டாவிடம் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முன்று உறுப்பினர்களும் செப்டம்பர் 2021-இல் அப்பதவிகளில் நியமிக்கப்பட்டனர். முன்னதாக, ஜூலை 22-ஆம் தேதியன்று JPSC தலைவர் எல். கியாங்டே (L Khiangte) தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து இருந்தார்.
JPSC தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; அதேவேளையில், ஜூலை 28-ஆம் தேதி முதல் கியாங்டேவிடம் இதுவரை நான்கு முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜூலை 28-ஆம் தேதியன்று ஒன்பது மணி நேரமும், ஜூலை 29 மற்றும் ஜூலை 31 ஆகிய தேதிகளில் தலா எட்டு மணி நேரமும் சி.ஐ.டி. அதிகாரிகள் கியாங்டேவிடம் விசாரணை நடத்தினர்.
தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக கியாங்டேவின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.ஐ.டி. அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு முந்தைய நாள் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதற்காகவே "தானாக முன்வந்து ராஜினாமா செய்ததாக" கியாங்டே கூறியிருந்தார்.
மாநிலத்தின் தலைமை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.
எதிர்ப்புகளுக்கு மத்தியில், "தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்" காரணமாக, ஜூலை 25 முதல் ஜூலை 27 வரை நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமை பணிகள் முதன்மைத் தேர்வை (Combined Civil Services Mains Exam) JPSC முன்னதாக ஒத்திவைத்திருந்தது.