

டெல்லி போராட்டத்தில் மாணவர்கள்மீது கண்மூடித்தனமான தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிரான மனுவை திங்கள்கிழமையன்று (ஜூலை.27) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில், “மாணவர்கள் போராட்டங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளோம். அதற்கான டைரி எண் (தற்காலிக பதிவு எண். அதாவது மனு பெறப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ சான்று) உருவாக்கப்பட்டுவிட்டது.
இதில் அவசரம் உள்ளது. மாணவர்களுக்கு எதிராகக் காவல்துறையினர் அளவுக்கு அதிகமாகத் தடியடி நடத்தி அத்துமீறி வருகிறார்கள்.
இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். நீதிமன்றம்தான் இதற்கு இடையில் நின்றுகொண்டிருக்கிறது.” என மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜெயமால்ய பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்மதித்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூன்.20 முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின் ஒருபகுதியாக ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி "சன்சத் சலோ" பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. பேரணிக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று டெல்லி காவல்துறை எச்சரித்தது. இதனைத் தொடர்ந்தும் போராட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டக்காரர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அவர்களை தடுக்க கண்ணீர் புகைக் குண்டுகள், பெல்லட் துப்பாக்கிகள் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். இதனால் 20க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெல்லட் துப்பாக்கியால் இளைஞர் ஒருவருக்கு கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீசார் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சீற்றத்தை தூண்டின.
பெண்கள்மீதும் சராமாரி தாக்குதல், அவர்களை தவறான இடங்களில் அடித்தல், நேம் பேட்ச் அணியாத காவலர்கள், குறிப்பாக சீருடை அணியாத காவலர்கள் என பல்வேறு சர்ச்சைகள் டெல்லி காவல்துறையை சூழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பாக முதலில் அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட தங்களுக்கு விருப்பம் இல்லை, நேரம் இல்லை என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவிற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழு, தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.