'புஷ்பா' உள்ளிட்ட படங்களை பார்த்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்- டெல்லியில் பரபரப்பு

ஒருவரை கொலை செய்து அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலம் அடைய இருந்ததாக சிறுவர்கள் தெரிவித்தனர்.
புஷ்பா திரைப்படம்
புஷ்பா திரைப்படம்
Published on

புது டெல்லி:

அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை பார்த்துவிட்டு, தாங்களும் குற்ற உலகில் பிரபலம் அடைய வேண்டும் என கருதி 3 சிறுவர்கள் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் ஜகாங்கீர்புரி பகுதி மருத்துவமனையில் ஷிபு என்ற நபர் கத்தி குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தபோதே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 3 சிறுவர்கள் சேர்ந்து ஷிபுவை கத்தியால் குத்தியது சிசிடிவி காணொளி மூலம் தெரிய வந்தது. 

அந்த சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தாங்கள் புஷ்பா உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரங்களை போல ஆக வேண்டும் என விரும்பியதாகவும், இதனால் ஒருவரை கொலை செய்து அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலம் அடைய இருந்ததாகவும் தெரிவித்தனர்.

தங்களது குழுவுக்கு ‘பட்னாம் கேங்’ என்று பெயரும் சூட்டியுள்ளனர்.

கொலை செய்வதற்காக ஜகாங்கீர்புரியில் ஷிபு என்பவரிடம் வேண்டுமென்றே சண்டைக்கு சென்றுள்ளனர். அதில் ஒரு சிறுவன் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்க, மற்றொரு சிறுவன் ஷிபுவை பின்னாலிருந்து பிடித்துக்கொள்ள, மூன்றாவது சிறுவன் கத்தியால் ஷிபுவின் வயிற்றில் குத்தியுள்ளான். ஷிபு கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதன்பின் போலீஸ் விசாரணையில் சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com