தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவால் அமைக்கப்பட்டு வரும் இந்த ஏவுதள அமைப்பு 2027 மார்ச் மாதம் பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனியாரிடம் ஒப்படைக்கப்படும் இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளம் - கிளம்பும் எதிர்ப்பு!
Published on

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவால் கட்டமைக்கப்பட்டு வரும், இந்தியாவின் இரண்டாவது விண்வெளி ஏவுதளத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை இன்-ஸ்பேஸ் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிறிய ஏவுகணைகளை, ராக்கெட்டுகளை ஏவுவதற்கென அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய ஏவுதளத்தை இயக்கவும், நிர்வகிக்கவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 2,233 ஏக்கர் பரப்பளவில், ரூ.986 கோடியில் உருவாகி வரும் இந்த ஏவுதளம் செயல்பாட்டுக்கு வந்தப்பிறகு, ராக்கெட்டுகளை ஏவுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தனியார் நிறுவனங்களே மேற்கொள்ளவுள்ளன.

இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு தேவையான ஆரம்பகால தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆதரவை இஸ்ரோ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027-ல் செயல்பாட்டுக்கு வரும் ஏவுதளம்

தற்போதுவரை இஸ்ரோ அலுவலகம், ராக்கெட் ஏவுதளக் கட்டிடம், பராமரிப்புப் பணிமனை மற்றும் ஒரே நேரத்தில் 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கக்கூடிய ஹெலிபேட் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. வரும் 2027 மார்ச் மாதத்திற்குள் இந்த ஏவுதளம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடியிலிருந்து சுமார் 55 கி.மீ தொலைவில், கடற்கரையில் அமைந்துள்ள குலசேகரப்பட்டினம் தளம், நிலநடுக்கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கிருந்து ஏவப்படும் சிறிய ராக்கெட்டுகள் இலங்கை வான்பரப்பைச் சுற்றி வளைக்காமல், நேரடியாகத் தெற்கு நோக்கி இந்தியப் பெருங்கடல் மேல் பாய முடியும்.

இதனால் ராக்கெட்டுகளின் எரிபொருள் பெருமளவு சேமிக்கப்பட்டு, கூடுதல் எடையைச் சுமந்து செல்ல முடியும்.

எதிர்ப்பு

முழுக்க முழுக்க நாட்டின் பொதுத்துறை நிதியிலும், இஸ்ரோவின் தொழில்நுட்பத்திலும் உருவாக்கப்பட்டு வரும் இந்த விண்வெளி உள்கட்டமைப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் இந்த திடீர் முடிவிற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com