வீடு தராமல் இழுத்தடித்தால் வங்கிகளும், பில்டர்களும் தான் கடனை ஏற்க வேண்டும்- வீடு வாங்குவோருக்கு இனி நிம்மதி

பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகட்டப்படும் போதே இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் வீடு வாங்குவார்கள். இதில் வாடிக்கையாளர், வங்கி மற்றும் கட்டுமான நிறுவனம் ஆகிய மூன்று தரப்பும் இணைந்து ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் போடுவார்கள்.
வீடு தராமல் இழுத்தடித்தால் வங்கிகளும், பில்டர்களும் தான் கடனை ஏற்க வேண்டும்- வீடு வாங்குவோருக்கு இனி நிம்மதி
Published on

வீடு வாங்குவோர் நிம்மதி பெரும் மூச்சு விடும் வகையில் வீடு தராமல் இழுத்தடித்தால் வங்கிகளும், பில்டர்களும் தான் கடனை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டு உள்ளது.

இடைக்காலத் தடை

சொந்த வீடு வாங்குவதற்காகப் பணம் செலுத்திவிட்டு, பில்டர்கள் வீட்டை ஒப்படைக்காததால் இ.எம்.ஐ கட்ட முடியாமல் தவிக்கும் நடுத்தர வர்க்க மக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒரு மிகப்பெரிய "நல்ல செய்தியை" வழங்கி உள்ளது. அதாவது சப்வென்ஷன்திட்டத்தின் கீழ் வீடு வாங்கி ஏமாந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு ஆதரவாக, அவருக்கு எதிராக வங்கிகள் எந்தவிதக் கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புகட்டப்படும் போதே இந்தத் திட்டத்தின் கீழ் மக்கள் வீடு வாங்குவார்கள். இதில் வாடிக்கையாளர், வங்கி மற்றும் கட்டுமான நிறுவனம் ஆகிய மூன்று தரப்பும் இணைந்து ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் போடுவார்கள். இந்தத் திட்டத்தின்படி, வங்கி தனது கடன் தொகையை நேரடியாகப் பில்டரின் கணக்கில் செலுத்திவிடும். பில்டர் வீட்டை கட்டி வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கும் வரை, அந்த வீட்டுக் கடனுக்கான மாதத் தவணையை பில்டரே வங்கியிடம் செலுத்தி வர வேண்டும். வீடு கைக்கு வந்த பிறகுதான் வாடிக்கையாளர் இ.எம்.ஐ கட்டத் தொடங்க வேண்டும். இதுதான் விதிமுறை.

இரட்டைப் பாதிப்பு

ஆனால், பல வீட்டு வசதித் திட்டங்களில் பில்டர்கள் வீட்டை உரிய நேரத்தில் கட்டி முடிக்காமல் இழுத்தடிப்பதோடு, வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ தொகையையும் பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். இத்தகைய சூழலில், வங்கிகள் பில்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தவறு செய்யாத மக்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து இ.எம்.ஐ தொகையைக் கட்டாய வசூல் செய்து வருகின்றன. இதனால் வீடு கிடைக்காமலும், கையில் இருந்த பணத்தை இழந்து, இ.எம்.ஐ-யும் கட்ட வேண்டிய இரட்டைப் பாதிப்புக்கு பொதுமக்கள் ஆளாகி வந்தனர்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் உடைமையைப் பெற முடியாததுடன், வங்கியின் இ.எம்.ஐ தொகையையும் கட்டாயமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி வி. மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஒப்புதல்

அவர்கள், இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் காலத்தில், இ.எம்.ஐ கட்டக் கோரி மனுதாரருக்கு எதிராக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இத்தகைய தேக்கமடைந்த வீட்டுவசதித் திட்டங்களில் ஏமாந்த வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக 'கடன் நிவாரண திட்டத்தை' உருவாக்குவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்குத்தாரர், கட்டுமானப் பணியின் முன்னேற்ற நிலைக்கு ஏற்ப மட்டுமே வங்கிகள் கடன் தொகை வழங்கும் நடைமுறையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

சப்வென்ஷன் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்கப்படாமல் ஏமாற்றப்பட்டால், "வழங்கப்பட்ட முழு கடன் தொகையின் இழப்பையும் வங்கியும், கட்டுமான நிறுவனமும் (பில்டர்) தான் சமமாகப் பிரித்து ஏற்க வேண்டும். வாடிக்கையாளரை வற்புறுத்தக் கூடாது என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதால், இனிவரும் காலங்களில் வீடு வாங்குவோர் வங்கிகளாலும் பில்டர்களாலும் ஏமாற்றப்படுவது முற்றிலும் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com