‘குறைந்த கல்வித் தகுதிக்கான வேலைவாய்ப்பில், அதிக தகுதி உடையவர்கள் சேர்வது மற்றவர் உரிமையை பறிக்கும் செயல்’ - உச்ச நீதிமன்றம்

பொது வேலைவாய்ப்புகள் அனைத்தும், நிர்ணயிக்கப்பட்ட தகுதி வரம்புகளுக்கு உட்பட்டு, தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
‘குறைந்த கல்வித் தகுதிக்கான வேலைவாய்ப்பில், அதிக தகுதி உடையவர்கள் சேர்வது மற்றவர் உரிமையை பறிக்கும் செயல்’  - உச்ச நீதிமன்றம்
Published on

குறைந்த கல்வித் தகுதி உடையவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளில், உயர் கல்வித் தகுதி உடையவர்கள் சேர்வது, அதற்கு உண்மையிலேயே தகுதியான மற்றும் திறமையான நபர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதற்குச் சமம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு படித்தோருக்கான, சிண்டிகேட் வங்கியில் தற்காலிக உதவியாளர் பணிக்கு, தனது உண்மையான படிப்பை மறைத்து ஒருவர் வேலைக்கு சேர்ந்ததை அறிந்த வங்கி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியது. இதனை எதிர்த்து அவர் வழக்குத்தொடர, சென்னை உயர் நீதிமன்றம் அவரை மீண்டும் பணிக்கு சேர்க்க உத்தரவிட்டது.

வங்கி நிர்வாகம் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தநிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதிகள்,

“எளிய தகுதியுடையவர்கள் தங்களைவிடப் பல மடங்கு கூடுதல் தகுதி பெற்றவர்களுடன் போட்டியிடும் நிலையைத் தவிர்க்கவே ஒரு முன்மாதிரியான அரசு இதுபோன்ற வேலைவாய்ப்புகளை அவர்களுக்கு ஒதுக்கியுள்ளது.

இப்படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பொது வேலைவாய்ப்பில், உயர் கல்வி தகுதியுடையவர்கள் தங்கள் தகுதியை மறைத்து நுழைவது, உண்மையில் அந்த வேலைக்குத் தகுதியான எளிய மனிதர்களின் வாழ்வாதாரத்தையும், வாய்ப்பையும் பறிக்கும் செயலாகும்.

உண்மைகளை மறைத்து, விதிகளை மீறிப் பெறப்படும் இத்தகைய பணி நியமனங்கள் சட்டத்தின் பார்வையில் ஆரம்பத்திலிருந்தே செல்லாத ஒன்றாகவே கருதப்படும்.

பொது வேலைவாய்ப்புகள் அனைத்தும், நிர்ணயிக்கப்பட்ட தகுதி வரம்புகளுக்கு உட்பட்டு, தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரு பதவிக்குக் கேட்கப்பட்டுள்ள தகுதியை விட ஒருவரிடம் கூடுதல் தகுதி இருக்கிறது என்பதற்காக மட்டுமே, அந்தப் பதவி தனக்குத்தான் வேண்டும் என்று எவரும் உரிமை கோர முடியாது.” என தெரிவித்து,

அதன்படி, மேல்முறையீடு அனுமதிக்கப்பட்டது, மேலும் பிரதிவாதியை பணியிலிருந்து நீக்குவதற்கான மேல்முறையீட்டாளர்/நிர்வாகத்தின் முடிவு உறுதி செய்யப்பட்டது. என தீர்ப்பு வழங்கினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com