குஜராத்தை மிரட்டும் சண்டிபுரா வைரஸ் தொற்று.. 22 குழந்தைகள் பலி!

பாதிக்கப்பட்ட அனைவரும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.
சண்டிபுரா வைரஸ்
சண்டிபுரா வைரஸ்
Published on

குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிரபுல் பனஷேரியா தெரிவித்துள்ளார்.

பாதிப்பு

ஜூலை முதல் வாரத்தில் இருந்து இந்த வைரஸ் குஜராத்தில் பரவி வருகிறது.

தரவுகளின்படி, குஜராத்தில் இதுவரை 184 பேருக்குச் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் 35 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானவர்களில் 7 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆகஸ்ட் 3 நிலவரப்படி மேலும் 11 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளன.

பாதிக்கப்பட்ட அனைவரும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தத் தொற்று குறிப்பிட்ட ஒரு கிராமத்திற்கோ அல்லது பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளது.

சண்டிபுரா வைரஸ்

'சண்டிபுரா என்செபாலிடிஸ்' என்று அழைக்கப்படும் சண்டிபுரா வைரஸ் என்பது மூளையைத் தாக்கி அழற்சியை உண்டாக்கும் ஒரு ஆபத்தான வைரஸ் தொற்றாகும்.

ஈக்கள் மற்றும் டெங்குவை பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உள்ளிட்ட பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.

காய்ச்சல், வாந்தி, மயக்கம், வலிப்பு, வயிற்றுப்போக்கு, நரம்பியல் பிரச்சினைகள் மற்றும் மூளை வீக்கம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

அரசு கோரிக்கை

சண்டிபுரா வைரஸ் தொற்றைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ தற்போது பிரத்யேக தடுப்பூசியோ அல்லது மருந்தோ இல்லை.

எனவே, குழந்தைகளுக்குக் காய்ச்சல், வாந்தி, வலிப்பு அல்லது நரம்பியல் சார்ந்த உடல்நலக்குறைவு அறிகுறிகள் தென்பட்டால், பெற்றோர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com