

அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி ஒரு அரசு வாகனம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி, மூத்த அதிகாரிகள் மற்றொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பில் கூடுதல் பொறுப்பு வகித்தாலும், அவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசு வாகனங்கள் ஒதுக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அரசு வாகனங்களின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், பணி இரட்டிப்பை நீக்குதல் மற்றும் பொது வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தனது சமீபத்திய அலுவலக அரசாணை ஒன்றில், நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை, ஊழியர்களின் பயன்பாடு குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடுமையாக அமல்படுத்துமாறு அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது, மத்திய அரசு முழுவதும் உள்ள அலுவல் வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விதிகளை ஒருங்கிணைத்து, செப்டம்பர் 2022-ல் முதன்முதலில் வெளியிடப்பட்ட விரிவான அறிவுறுத்தல்களை வலுப்படுத்துகிறது.
கடந்த 2022 செப்டம்பரில் வெளியான அறிவிப்பில், தகுதியுள்ள அதிகாரிகள் தங்களின் வழக்கமான மாதாந்திரப் போக்குவரத்திற்கு அளிக்கப்படும் படியை தவிர்த்து, மாதம் ரூ. 3,000 கட்டணம் செலுத்தி, அரசு வாகனங்களைத் தனிப்பட்ட பயணங்களுக்கு (மாதத்திற்கு 500 கி.மீ. வரை) பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
புதிய விதிமுறைகளின்படி வெளியான அரசாணையில், “ஏற்கனவே அரசுப் பணியாளர் வாகனத்திற்கு உரிமை பெற்ற ஒரு அதிகாரிக்கு, வேறொரு அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்பின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட காரணத்தால் மட்டும் மற்றொரு அரசு வாகனம் ஒதுக்கப்பட முடியாது.
மாறாக, அந்த அதிகாரி தமக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணியாளர் வாகனத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
அலுவல் பணி நிமித்தமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களின்போதோ தவிர, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு சார்ந்த அமைப்புகளுக்குச் சொந்தமான வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்துவதையும் இந்த குறிப்பாணை தடை செய்கிறது.
நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும், அரசு வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், அலுவல் ரீதியான போக்குவரத்தில் தவிர்க்கக்கூடிய செலவினங்களைக் குறைப்பதற்கும், திருத்தப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று செலவினத் துறை தெரிவித்துள்ளது.
‘ஒரு தகுதியுள்ள அதிகாரிக்கு ஒரு அலுவல் வாகனம்(கார்)’ என்ற கொள்கையானது, நிதி சிக்கனத்தை ஊக்குவிப்பதோடு, அமைச்சகங்கள் மற்றும் துறைகள் முழுவதும் பணியாளர்களின் வாகன நிர்வாகத்தைச் சீரமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு பயன்படுத்தாமல் வைத்திருக்கும் வாகனங்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தாங்கள் பயன்படுத்தும் கார்களின் பயன்பாடு குறித்த, மத்திய அரசின் அறிவுறுத்தல்களை விரிவாக ஆய்வு செய்து கடந்த 2022 செப்டம்பர் 1 ஆம் தேதி, செலவினத் துறை வெளியிட்ட முதன்மை அலுவலகக் குறிப்பாணையைத் தொடர்ந்து இந்த சமீபத்திய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை அனைத்து அமைச்சகங்களும் மற்றும் துறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.