சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- சிறப்பு விசாரணை குழு அமைப்பு

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.சிறுமின் தாய்க்கு வழக்கு செலவாக ரூ.50,000, இதர செலவுக்காக ரூ.25,000 தமிழக அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- சிறப்பு விசாரணை குழு அமைப்பு
Published on

சென்னை:

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அதனை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த 11-ந்தேதி தடைவிதித்தது.

மேலும் தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், அதற்கு வேறு மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஏழு பேர் பட்டியலை சுருக்கமான விபரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கானது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ஒன்பது ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.பார்த்திபன், அந்த சிறுமியின் தாய் நீதிமன்றத்துக்கு வந்திருப்பதாக நீதிபதிகள் முன்பு தெரிவித்தார்

இதையடுத்து, நீதிபதிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை வரவழைத்து, இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தால் விசாரணை முடிய நான்கு, ஐந்து, ஏழு ஆண்டுகள் வரை காலதாமதம் ஆகும். விசாரணையின் கோணமும் எவ்வாறு செல்கிறது என்பதையும் கூற முடியாது. எனவே தமிழ்நாடு காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் ஆகியோர்களை வைத்து விசாரணை நடத்தலாம். அதனை நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கூறினர்.

மேலும், இந்த வழக்கை விசாரிக்க தமிழ்நாடு கேடரை சேர்ந்த மற்றும் தமிழ்நாட்டை சாராத ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும், அந்த வகையில் டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுகிறது.

இதில் ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா, ஆகிய அதிகாரிகள் இடம் பெறுகின்றனர்.

இந்த சிறப்பு புலனாய்வு குழு தினந்தோறும் விசாரணையை நடத்த வேண்டும். அதனை சென்னை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும், சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் விசாரணை அறிக்கையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முன்பு சமர்பிக்க வேண்டும்.

அந்த அறிக்கை அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய தகுதியான அமர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அமர்வு முன்பு சிறப்பு புலனாய்வு குழுவானது தனது விசாரணை நிலை அறிக்கையை வாரம் ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு செலவுக்காக ரூபாய் 50 ஆயிரத்தையும், மேலும் இதர செலவுக்காக 25 ஆயிரம் ரூபாயையும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com