அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவுறுத்தல்

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மும்பையில் மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் மந்திரி ஆதித்ய தாக்கரே அறிவுறுத்தி உள்ளார்.
ஆதித்ய தாக்கரே
ஆதித்ய தாக்கரே
Published on

மும்பை :

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. அதிலும் தலைநகர் மும்பை மோசமான பாதிப்புக்கு ஆளாகி வருகிறது. தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த பாதிப்பு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியதாவது:-

மும்பை நகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து நகர மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இருப்பினும் நாம் அனைவரும் தீவிர முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்வதையும், முககவசம் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும்.

அடுத்து 48 மணி நேரத்தில் நகரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுடன் மும்பை மாநகராட்சி தொடர்பு கொண்டு, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஒழுங்குபடுத்த திட்டமிடும்.

அதேபோல கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் எடுக்க தகுதியுடைய சுகாதார பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பட்டியலையும் அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். நகரில் அனைத்து பொது இடங்களும் வருகிற 31-ந் தேதி அன்று மூடப்பட்டு இருக்கும்.

பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் உதவியுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விதிக்கப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்களை மீறும் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறும் ஆஸ்பத்திரிகள் சில மாதங்களுக்கு சீல் வைக்கப்படும். நகரில் தற்போது 54 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com