ராகுல் காந்தியை மீண்டும் விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை திட்டம்.. விரைவில் சம்மன்

வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் நேரில் அழைக்கப்படுவார்கள் அமலாக்கத்துறை விரைவில் தனது வீட்டுக்கு ரெய்டு வர உள்ளதாகவும், அவர்களுக்காக டீ பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்
ராகுல் காந்தியை மீண்டும் விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை திட்டம்.. விரைவில் சம்மன்
Published on

அமலாக்கத்துறை சம்மன் 

காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பண மோசடி வழக்கில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஏதுவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது எனவே வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் நேரில் அழைக்கப்படுவார்கள் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 சக்கர வியூகம் 

தற்போது மீண்டும் ராகுல் காந்தி விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாகக் கடந்த வாரம் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மக்களவையில் மோடியின் சக்கர வியூகத்தில் நாடு மாட்டிக்கொண்டுள்ளதாகத் தான் பேசியது சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே அமலாக்கத்துறை விரைவில் தனது வீட்டுக்கு ரெய்டு வர உள்ளதாகவும், அவர்களுக்காக டீ பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு 

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குக் காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டு இருந்ததால் அக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவன பங்குகள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் ரூ.90 கோடி கடனுக்காக அசோசி யேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பங்குகளை பெற்றுக் கொண்டதாக மனுவில் கூறினார். இது தொடர்பாக வருமான வரிதுறை வழக்குப்பதிவு செய்தது.

இதைத்தொடர்ந்து பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை கடந்த காலங்களில் சம்மன் அனுப்பி பலமணிநேர விசாரணையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com