

தற்போதைய சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே, தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கர்நாடக-தமிழகம் இடையே காவிரி நீரைப் பகிர்வதில் நிலவி வரும் நீண்டகாலப் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கருதுகிறார். இதற்காக கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து பேச முடிவு செய்து அவர் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், வருகிற 3-ந்தேதி அவர் பெங்களூரு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மேகதாது அணை பிரச்சனை குறித்து முதலமைச்சர் விஜய், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தலைமை செயலாளர் உள்ளிட்டோருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
* தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகா வருவதாக கூறி உள்ளார். ஆனால் இன்னும் உறுதியாகவில்லை.
* தமிழக முதல்வர் விஜயும் தானும் அவரவர் மாநில நலனில் அக்கறையுடன் இருக்கிறோம்.
* கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜகவும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.
* காவிரிநீர் கோரிக்கையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் வந்தால் பெங்களூரு விமான நிலையம் முற்றுகையிடப்படும் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
* கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் தற்போதைக்கு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.