ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்: அதிருப்தி எம்.எல்.ஏ.-க்களுக்கு டி.கே. சிவக்குமார் எச்சரிக்கை

கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் அதிருப்தியில் உள்ளனர்.
DK Shivakumar
டி.கே. சிவக்குமார்
Published on

அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்காததால் ராஜினாமா செய்வதாக மிரட்டும் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்குக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் கட்சியே முக்கியம், அவர்கள் ராஜினாமா செய்தால் சில நிமிடங்களிலேயே அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

டி.கே. சிவக்குமார் கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 19 அமைச்சர்களைச் சேர்த்துத் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார்.

அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா மிரட்டல்

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் இறுதியாக நடந்தேறிய நிலையில், அது ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவி கிடைக்காத சிலர் ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தனர்.

இண்டி (Indi) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான யஷ்வந்தராயகௌடா வி. பாட்டீல், திங்களன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அமைச்சரவையில் இடம்பெற விரும்பும் பலரின் ஆதரவாளர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். முதலமைச்சர் உட்பட கர்நாடக அமைச்சரவையின் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 34 ஆகும். திங்களன்று மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, தற்போது அதில் ஒரு அமைச்சர் பதவி காலியாக உள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.-க்கள் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். அரசியலில் ராஜினாமாக்கள் நிகழ்வது இயல்பு. ராஜினாமா செய்பவர்களை யாரும் தடுக்க முடியாது. கட்சி மற்றும் தங்கள் எதிர்காலம் முக்கியம் என்று கருதினால், கட்சிதான் முதன்மையானது. கட்சி இருந்தால்தான் மற்ற அனைத்தும் சாத்தியம்.

தரம் சிங் மற்றும் சித்தராமையா ஆகியோர் முதல்வராக இருந்தபோது எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அப்போதே நானும் ராஜினாமா செய்திருக்கலாமே? பரமேஸ்வரா (துணை முதல்வர்) மற்றும் நான் பொறுமை காக்கவில்லையா? வீரேந்திர பாட்டீல் முதல்வராக இருந்தபோது பங்காரப்பா, கார்கே (ஏஐசிசி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே) மற்றும் தரம் சிங் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், பின்னர் பங்காரப்பா மற்றும் சிங் முதல்வர்களாகவில்லையா? ஒருவருக்குப் பொறுமை அவசியம்.

ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்படும்

யாராவது ராஜினாமா செய்தால், சில நிமிடங்களிலேயே அதை ஏற்றுக்கொள்வேன். முன்பு வாரியங்கள் மற்றும் கழகங்களின் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் நியமிக்கப்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களிடம், அவர்களின் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே என்று கூறப்பட்டிருந்தது.

ஏற்கனவே இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் அந்தப் பதவிகளில் இருப்பவர்களை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு, புதியவர்களை நியமிப்பேன். அதன் பிறகு எம்.எல்.ஏ-க்களுடன் தனித்தனியாகப் பேசுவேன்.

இவ்வாறு டி.கே. சிவக்குமார் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com