

கோடை வெப்பத்தால் நீர் ஆவியாவதே டெல்லி தண்ணீர் தட்டுப்பாடுக்கு காரணம் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா பேசியுள்ளது சமூக ஊடகங்களில் கேலிக்கு உள்ளாகி வருகிறது.
பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தண்ணீருக்கு எவ்வளவு பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த அளவுக்குக் கடுமையான வெயில் அடிக்கும் போது, விநியோகிக்கப்படும் தண்ணீரில் ஒரு பகுதி வழியிலேயே ஆவியாகி விடுகிறது. இதன் காரணமாகத்தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது." என்று பேசினார்.
குப்தாவின் இந்த விசித்திரமான விளக்கத்தை எதிர்க்கட்சிகளும் நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக், ரேகா குப்தா பேசிய வீடியோவை எக்ஸில் பகிர்ந்து, "டெல்லி தண்ணீர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் ரேகா குப்தாவின் கருத்து இதுதான். முட்டாள்தனத்திற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டாமா?" என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண், "நமது டீக்கடைக்காரர் (பிரதமர் மோடியை மறைமுகமாகக் குறிப்பிட்டு) பல விஞ்ஞானிகளை அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும் உருவாக்கியுள்ளார். தண்ணீர் தட்டுப்பாடு ஏன் ஏற்படுகிறது என்பதற்கான அறிவியல் பூர்வமான விளக்கத்துடன் இதோ நமது முதல்வர் ரேகா குப்தா!" என்று சாடியுள்ளார்.
கோடைகாலத்தில் திறந்தவெளி நீர்நிலைகளில் இருந்து நீர் ஆவியாவது இயல்புதான் என்றாலும், தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அது முழுமுதற் காரணம் கிடையாது. தண்ணீரின் தேவை அதிகரிக்கும்போது அதை கொண்டு சேர்ப்பதற்கு ஏற்ற உள்கட்டமைப்பு இன்மையும், முறையான பராமரிப்பின்மையுமே தண்ணீர் டெல்லி போன்ற நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணங்களான கூறப்படுகிறது.