

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் ஜூன் 13-ஆம் தேதிக்குள் தனது பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் நேரில் சென்று தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய அளவில் பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புத் தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று பதவி விலகக் கோரி , கடந்த ஜூன் 6-ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சி.ஜே.பி அமைப்பு சார்பில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக, நேற்று எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சி.ஜே.பி நிறுவனர் அபிஜீத் திப்கே கூறியிருப்பதாவது: "மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஜூன் 13ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்யவில்லை என்றால், இப்போராட்டம் அடுத்தகட்டமாக மிகத் தீவிரமடையும். நானே தனிப்பட்ட முறையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், முக்கிய நகரங்களுக்கும் நேரில் சென்று அவரது ராஜினாமாவை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுப்பேன்.
மாநில அளவிலான போராட்டங்களுக்குப் பிறகும் அவர் பதவியை விட்டு விலகவில்லை என்றால், டெல்லியில் மீண்டும் ஒரு பிரம்மாண்ட போராட்டத்தைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மாணவர்கள் டெல்லியில் திரண்டு அமைதியான முறையில் போராடுவோம். ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கியதற்கு அவர் பொறுப்பேற்று விலகும் வரை எங்கள் போராட்டம் ஓயாது." என கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளில் Gen Z நடத்திய போராட்டங்கள் மற்றும் அங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றப் புரட்சியுடன் இந்த அமைப்பை ஒப்பிட்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திப்கே:
"இந்தியாவில் முறையான ஜனநாயகக் கட்டமைப்பு மற்றும் சட்ட நிர்வாக அமைப்பு உள்ளது. எனவே, எங்கள் அமைப்பை அண்டை நாட்டுப் போராட்டங்களுடன் ஒப்பிட வேண்டாம். நாங்கள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த விரும்புவதாகச் சிலர் அவதூறு பரப்புகிறார்கள். டெல்லி ஜந்தர் மந்தரில் கூடிய இளைஞர்கள் கூட்டம் மிகப் பெரியது என்றாலும், அது முற்றிலும் அமைதியான முறையில் நடைபெற்றது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இனிவரும் போராட்டங்களும் அமைதியான வழியிலேயே நடக்கும். இந்த இயக்கம் முழுக்க முழுக்க Gen Z இளைஞர்களுக்கானது; இதற்கும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை," என்று அவர் திட்டவட்டமாக மறுத்தார். கடந்த மே மாதத்தில், சமூக வலைதளங்களில் 'கரப்பான் பூச்சி' என்ற வார்த்தையை மையமாகக் கொண்டு ஒரு நையாண்டி பக்கமாகத் தொடங்கப்பட்டதே இந்த 'CJP' இயக்கம். மிகக் குறுகிய காலத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 22 மில்லியக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று இந்த இயக்கம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கரப்பான் பூச்சி முகமூடிகளை அணிந்து கொண்டு, தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு வினோதமான முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சி "இந்து - முஸ்லிம்" என்ற பிரிவினைவாத அரசியலை நிறுத்த வேண்டும் என்றும், "பாரத் மாதா கீ ஜெய்" என்ற முழக்கங்களுடனும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.