

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ஜூன் மாதத் தொடக்கத்தில் அபிஜீத் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களைத் திரட்டி போராட்டத்தை முன்னெடுத்தார். சிஜேபி கட்சி ஜூன் 20 அன்று காலவரையற்ற போராட்டத்தை டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கியது.
கரப்பான்பூச்சி கட்சி இளைஞர்களின் போராட்டம் காரணமாக கடந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் பரபரப்பு நிலவியது.
குறிப்பாக, கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் வன்முறை ஏற்பட்ட பிறகு அவ்வப்போது இரவு நேரங்களில் கல் வீச்சு, தடியடி சம்பவங்கள் நடந்தன. இதனால், ஜந்தர் மந்தர் பகுதியே பதற்ற பூமியாக காணப்பட்டது. ஒருபுறம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிய, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இணைய சேவை துண்டிப்பு, மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் என அப்பகுதியை சார்ந்த பொதுமக்களுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், நீட் தேர்வு ரத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும் மற்றும் மாணவர்களை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு வாக்குறுதி அளித்தது.
இதன் அடிப்படையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களின் போராட்டம் வாபஸ் பெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
இந்நிலையில், சுமார் ஒரு மாத காலத்துக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் வீடு திரும்பியதால் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் அமைதி திரும்பியது.
இரவோடு இரவாக பந்தல்களை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர் அப்பகுதியில் சேர்ந்திருந்த குப்பைகளை எல்லாம் தாங்களே அகற்றினர். மீண்டும் அங்கு கூட்டம் கூடாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.