

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா). சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவியது. ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் மற்ற இடங்களில் 5 பேருக்கு மேல் கூட தடைவிதிக்கப்பட்டது. பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படடுத்தப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக நாடாளுமன்ற வடக்கு வாயில் மூடப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் துணை ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களின் பேரணி தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி வந்தனர். அப்போது நாடாளுமன்றத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினர். மேலும் பலத்த பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், புது டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் நிலவி வரும் தீவிர அரசியல் நடவடிக்கைகள், போராட்டங்கள் மற்றும் பல்வேறு தேசிய பிரச்சினைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்ற நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.