தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு -மத்திய அரசு மறுபரிசீலனை செய்யாது

விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அணிவகுப்பு
அணிவகுப்பு
Published on

புதுடெல்லி:

குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். 

தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது என்று கூறியது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். 

இதேபோல்  மேற்கு வங்காள ஊர்திக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

இதையடுத்து இந்த விவகாரத்துக்கு மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்காள மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறாது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

அலங்கார ஊர்தியை இடம்பெறச் செய்வது தொடர்பாக தமிழகம், மேற்கு வங்காளத்தின் கோரிக்கையை மத்திய அரசு மறுபசீலனை செய்யாது என்றும், ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் விளக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com