அன்னை தெரசா அறக்கட்டளை வங்கிக் கணக்குகள் முடக்கம்? மம்தாவின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்

அன்னை தெசா அறக்கட்டளையின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட உரிமம் புதுப்பித்தல் தொடர்பான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் அன்னை தெரசா அறக்கட்டளையின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியிருப்பதாக முதல்வர்  மம்தா பானர்ஜி வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  “கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மத்திய அமைச்சகம், அன்னை தெரசா அறக்கட்டளையின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்கியிருக்கிறது. அறக்கட்டளையில் பராமரிக்கப்படும் 22,000 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் உணவு மற்றும் மருந்துகள் இன்றி தவிக்கின்றனர். சட்டம் முக்கியம் என்றாலும், மனிதாபிமான செயல்களில் சமரசம் செய்யக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், அன்னை தெரசா அறக்கட்டளையின் எந்த வங்கி கணக்குகளையும் அரசு முடக்கவில்லை என கூறி உள்ளது. அதேசமயம், தனது ஸ்டேட் வங்கி கணக்குகளை முடக்கி வைக்கும்படி  அறக்கட்டளை சார்பில் ஸ்டேட் வங்கிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

அன்னை தெரசா அறக்கட்டளையின் எப்சிஆர்ஏ லைசென்ஸ் (வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட உரிமம்) டிசம்பர் 31ம் தேதி காலாவதியாக உள்ளதாகவும், லைசென்ஸ் புதுப்பித்தல் விண்ணப்பத்தில் பாதகமான உள்ளீடுகள் இருந்ததால் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அறக்கட்டளை சார்பில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com