

மேற்கு வங்கத்தில் தாய்மொழியான பெங்காலி மொழியை செப்டம்பர் 1 முதல் அனைத்து மாநில அரசு பணிகளுக்கும் கட்டாயமாக்க போவதாக இன்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.
குடிமக்கள் சேவைகள், டிஜிட்டல் அமைப்புகள், விண்ணப்பப் படிவங்கள், சான்றிதழ்கள், இணையதளங்கள், மொபைல் செயலிகள், பொது அறிவிப்புப் பலகைகள், பத்திரிக்கை வெளியீடுகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து பொதுத் தகவல்தொடர்பு வழிகளிலும் செப்டம்பர் 1 முதல் பெங்காலி பயன்பாட்டை அரசு கட்டாயமாக்க போவதாக கூறினார்.
மேலும் முதல் தகவல் அறிக்கைகள் (FIR), குறைதீர்ப்பு, குடிமக்கள் தரவு மற்றும் பாதுகாப்பு, பொது விழிப்புணர்வு செய்திகள் போன்ற காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பொது சேவைகளிலும் பெங்காலி பயன்பாடு உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
மேற்கு வங்க நிர்வாகத்தில் வங்காள மொழியைப் பரவலாகப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்குக் கடிதம் எழுதி பரிந்துரை செய்ததாகவும் சுவேந்து அதிகாரி கூறினார்.
இந்த அறிவிப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில், “இந்தியாவின் மாபெரும் கல்வியாளரும், அரசியல்வாதியும், ஆழ்ந்த சிந்தனையாளருமான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் இந்த ஆண்டில் வருகிறது.
டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, இந்திய மொழிகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் பரவலாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
நிர்வாகம், கல்வி மற்றும் பொது வாழ்வில் இந்திய மொழிகளுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும் என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது.
மேற்கு வங்க அரசாங்கத்தின் சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் வழங்கிய ஆலோசனையை ஏற்று, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் செப்டம்பர் 1, 2026 முதல் நமது தாய்மொழியான வங்காள மொழியைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
2011-ல் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி சுசாந்தா சாட்டர்ஜி தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையைப் பொதுமக்கள் முன்னிலையில் நான் வெளியிடுவேன்.
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலத்தில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தாலும், அது ஒருபோதும் வெளியிடப்படவில்லை.
செப்டம்பர் 1, 2026 முதல், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாக மட்டங்களிலும் வங்காள மொழி கட்டாயமாக்கப்படும்.
இந்த காலகட்டத்தில், எங்கள் அரசாங்கம் மொழிபெயர்ப்பாளர்களையும் மற்ற அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்யும்.
இந்திய அரசுடன் அலுவல் ரீதியான தகவல்களுக்கு, வெளிநாட்டு மொழிக்குப் பதிலாக வங்காளம் மற்றும் அலுவல் மொழியான இந்தியைப் பயன்படுத்தலாம்” என்று முதலமைச்சர் சுவேந்து அதிகாரி கூறினார்.