உத்தவ் தாக்கரே கார் மீது தாக்குதல்: நவநிர்மாண் சேனாவினர் கைது

நவநிர்மாண் சேனாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கோஷம்.தாக்குதலுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை.
உத்தவ் தாக்கரே கார் மீது தாக்குதல்: நவநிர்மாண் சேனாவினர் கைது
Published on

மராட்டியத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும், அவரது உறவினரும் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவருமான ராஜ் தாக்கரேக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தை மோதல் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் பீட் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேவின் பாதுகாப்பு வாகனம் மீது உத்தவ் தாக்கரே கட்சியினர் பாக்குகளை (குட்கா) வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

மராத்தா இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய ராஜ் தாக்கரேயை கண்டிக்கும் வகையில் அவரது பாதுகாப்பு வாகனம் மீது பாக்குகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தானேயில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு வருகை தந்தார். தானே கட்காரி ரங்கயாதன் பகுதியில் அவரது கார் வந்தபோது, அங்கு கூடியிருந்த நவநிர்மாண் சேனாவினர் உத்தவ் தாக்கரேக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் உத்தவ் தாக்கரே சென்ற கார் மீது தேங்காய், வளையல், தக்காளி, மாட்டு சாணம் ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர். ஆனால் அவரது கார் அதற்குள் சென்றுவிட்டது. பின்னால் வந்த அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது அவை விழுந்து சேதமடைந்தது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் நவநிர்மாண் சேனாவினரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

ராஜ் தாக்கரே பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உத்தவ் தாக்கரேவின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட நவநிர்மாண் சேனா கட்சியினர் தெரிவித்தனர்.

முன்னதாக ராஜ் தாக்கரே பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை என உத்தவ் தாக்கரே கட்சி விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com