அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 98-ஆக உயர்வு; 13 மாவட்டங்களில் 1.55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

தன்சிரி ஆறும், ஸ்ரீபூமி மாவட்டத்தில் குஷியாரா ஆறும் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன.
assam floods
Published on

அசாமில் வெள்ள சூழல் மோசமாகவே நீடித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பலி எண்ணிக்கை 98-ஐ எட்டியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 13-ஆகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.55 லட்சமாகவும் குறைந்துள்ளது.

சாரைடியோ (Charaideo) மாவட்டத்தில் உள்ள மஹ்மோரா வருவாய் வட்டத்தில்தான் இந்த சமீபத்திய உயிரிழப்பு பதிவாகி இருப்பதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கை தெரிவிக்கிறது.

33 வட்டங்களில் பாதிப்பு:

சிவசாகர், கோலாகாட், நாகான், ஹோஜாய், சோனித்பூர், தேமாஜி, தர்ராங், பிஸ்வநாத், காம்ரூப் (மெட்ரோ), லக்கிம்பூர், உதல்குரி, ஜோர்ஹாட் மற்றும் சாரைடியோ ஆகிய 13 மாவட்டங்கள் வெள்ளத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன; இதனால் 33 வருவாய் வட்டங்களும் 464 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் மொத்தம் 1,55,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கோலாகாட் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சிவசாகர் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன. கடந்த வியாழக்கிழமையன்று 15 மாவட்டங்களும், 1.68 லட்சத்துக்கும் அதிகமான மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சேத விவரம்:

நிர்வாகம் 55 நிவாரண முகாம்களை நடத்தி வருகிறது; இவற்றில் இடம்பெயர்ந்த 10,000-க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 நிவாரண பொருட்கள் விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

கோலாகாட் மாவட்டத்தில் உள்ள கோலாகாட் நகரம் மற்றும் நுமாலிகர் ஆகிய இடங்களில் தன்சிரி ஆறும், ஸ்ரீபூமி மாவட்டத்தில் குஷியாரா ஆறும் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன.

10,748.64 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன; அதேவேளையில் 47,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com