

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 78 ஆக உயர்ந்துள்ளது என அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிவசாகர் மாவட்டத்தில் இருவரும், கோலாகாட் மாவட்டத்தில் ஒருவரும் என புதிதாக 3 பேர் வெள்ளத்திற்கு பலியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் '3,00,031 பேர்' வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவசாகர், சராடியோ, கோலாகாட், ஜோர்ஹாட், நகோன், பிஸ்வநாத் மற்றும் கம்ரூப் மெட்ரோபொலிட்டன் ஆகிய 7 முக்கிய மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மொத்தம் 21 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 551 கிராமங்கள் வெள்ள நீரில் தவித்து வருகின்றன. மேலும் 21,523 ஹெக்டேர் விவசாய நிலங்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
அசாம் மற்றும் அதன் சுற்றியுள்ள வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீண்டும் பெய்யும் கனமழையால் நகர்ப்புற நீர் தேக்கம், ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதிகளில் மேலும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
அசாமில் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தற்போதைய வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.