

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது.
கடந்த 2025 டிசம்பர் 15 அன்று ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயதுக் குழந்தை சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு வார்டில் இருந்த செவிலியர் ஒருவர் வழக்கமான மருந்து ஊசியைச் செலுத்த ஆயத்தமானார்.
ஆனால் மருந்துப் பாட்டிலுக்குப் பதிலாக அருகில் வைக்கப்பட்டிருந்த பார்மலின் (Formalin) என்ற நச்சு ரசாயனம் அடங்கிய திரவத்தைக் கவனக்குறைவாக எடுத்து, ஊசி மூலம் குழந்தையின் உடலில் செலுத்தியுள்ளார்.
இந்த நச்சு ரத்தத்தில் கலந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, குழந்தையின் உடல்நிலை மிக மோசமடைந்து, அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த 2025 டிசம்பர் பாதியில் இந்தச் சம்பவம் நடந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தனது தவறை மூடி மறைக்க முயன்றதாகக் குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குழந்தையின் மரணத்திற்குப் பின் தொடர் போராட்டங்கள் மற்றும் மருத்துவக் குழுவின் உள்விசாரணைக்குப் பிறகே, இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
பார்மலின் என்பது இறந்த உடல்கள் அழுகிப் போகாமல் பல ஆண்டுகள் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு திரவமாகும்.
இதை நேரடியாக நரம்பு வழியாகச் செலுத்தும் போது, அது மனித உடலின் உள் உறுப்புகளை உடனடியாகச் செயலிழக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது.