மம்தாவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி: எம்.பி.க்களிடமும் அதிருப்தி நிலவுவதாக சுகேந்து சேகர் ராய் பரபரப்பு தகவல்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனியாக செயல்பட உள்ள நிலயைில், எம்.பி.க்களிடமும் அதிருப்தி உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார்.
மம்தாவுக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி: எம்.பி.க்களிடமும் அதிருப்தி நிலவுவதாக சுகேந்து சேகர் ராய் பரபரப்பு தகவல்
Published on

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி தோல்வியை சந்தித்தது. பாஜக 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று முதன்முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

தனியாக செயல்படும் 60 எம்.எல்.ஏ.க்கள்

மம்தா பானர்ஜி மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் திரிணாமுல் கட்சிக்கும், மம்தா பானர்ஜிக்கும் பாஜக கடுமையாக நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சியில் உட்கட்சி பூசல் பெரிய அளவில் வெடித்த வண்ணம் உள்ளது.

மொத்தம் உள்ள 80 எம்.எல்.ஏ.-க்களில் 60 பேர் தனியாக செயல்படுகின்றனர். நாங்கள்தான் எதிர்க்கட்சி என அவர்கள் சட்டசபை சபாநாயகரிடம் முறையிட்டுள்ளனர். இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி உடையும் சூழ்நிலை அபாயத்தை உணர்த்தியுள்ளது.

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களிடமும் அதிருப்பு நிலவுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த மாநிலங்களவை தலைவரான சுகேந்து சேகர் ராய் தெரிவித்துள்ளது. இது மம்தா பானர்ஜிக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏற்கனவே 3-ல் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.-க்கள் பிரிந்துள்ளனர். தற்போது எம்.பி.க்களும் அதேபோன்று பிரிந்துவிட்டால் கட்சியை கையை விட்டு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எம்.பி.க்களிடம் அதிருப்தி இருப்பது தொடர்பாக சுகேந்து சேகர் ராய் கூறியதாவது:-

இவ்வளவு குறுகிய காலத்தில் சுமார் 60 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுவதை நான் இதுவரை பார்த்ததில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், மக்களவையிலும் இதே போன்றதொரு எதிர்வினை ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது நடப்பது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. அந்த அமைப்பு இறுதியில் உடைந்துபோகும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். அந்தச் செயல்முறை தொடங்கிவிட்டது.

உடல்ரீதியாக நான் இன்னும் கட்சியில் இருக்கிறேன், ஆனால் மனதளவில் இல்லை. ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களுடன் நான் ஏன் தொடர்ந்து இருக்க வேண்டும்?

நாளை என்ன நடக்கும் என்று என்னால் எப்படிச் சொல்ல முடியும்? அந்தச் சூழல் வரும்போது அதைப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இதுவரை யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.

இவ்வாறு சுகேந்து சேகர் ராய் தெரிவித்துள்ளார்.

தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 மக்களவை, 13 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com