

கருத்து வேறுபாடுகள் திருமண வாழ்க்கையின் ஒரு அங்கம் என்றும், பல நாட்களாகத் தன் மனைவியுடன் பேசவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை குற்றவாளியாக கருத முடியாது எனவும், பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவரை விடுவித்த உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கணவர் 13 நாட்களாக பேசாமல் இருந்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கணவரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து அந்த கணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் அதுல் எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, “எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், வலுவான சான்றுகளுடன் அதை நிரூபிக்காமல், இறந்தவருடன் 13 நாட்கள் தொடர்பில்லாமல் இருந்தது மட்டுமே, இந்த வழக்கின் சூழலில் கொடுமை எனும் வரம்பிற்குள் வராது.” என தெரிவித்து தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சாதாரண தம்பதியினருக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளும், தற்காலிக மௌனமும் ஐபிசி பிரிவு 498A-ன் கீழ் வரும் குற்றவியல் கொடுமையாக மாறாது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு செயல் தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு மிகவும் தீவிரமான மற்றும் அழுத்தமானதாக இருக்க வேண்டும். சாதாரண உணர்வுப் பூர்வமான சண்டைகள் மற்றும் மன அழுத்தங்களை தானாகவே குற்றவியல் கொடுமையாகக் கருத முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். திருமணத்தின்போது, பெண்ணின் பெற்றோர் கணவர் வீட்டாருக்கு 3 லட்சம் ரூபாய், 20 சவரன் தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
ஆனால் இதுபோதாதென்று அடிக்கடி பணம், பொருட்கள் கேட்டு அப்பெண்ணை அவரது கணவர் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பெண் தனது பெற்றோரிடம் பேசக்கூடாது என அந்த மாப்பிள்ளை வீட்டார் உத்தரவு போட்டிருந்ததாகவும், அதனைமீறி பெற்றோரிடம் பேசியதால், அவரிடம் பேசுவதை அந்த கணவர் நிறுத்தியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இதனடிப்படையில் அப்பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் மற்றும் இரண்டு மைத்துனர்கள் (அவர்களில் ஒருவர் சிறார்) மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A மற்றும் 304B பிரிவுகளின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் அந்த சிறாரை தவிர மற்ற நான்கு பேருக்கும் எதிராக விசாரணை நடத்தப்பட்டது. இதில் விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்து, கணவர் தாக்கல் செய்த குற்றவியல் மறுசீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது.