மத்திய பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை

பழங்கால பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய சட்டவிரோத சந்தையில் இத்தகைய பீரங்கிகளுக்கு நல்ல மதிப்பு உண்டு.
மத்திய பிரதேசத்தில் 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி துப்பாக்கி முனையில் கொள்ளை
Published on

மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள நர்வார் கோட்டை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னமாகும்.

கச்வாஹா ராஜ்புத் மன்னர்களால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த கோட்டையில், வரலாற்று சிறப்புமிக்க 14 பீரங்கிகள் இருந்தன. இந்த பீரங்கிகள், சிந்தியா மன்னர்களின் ஆட்சி காலத்தை சேர்ந்தவை ஆகும். ஒவ்வொரு பீரங்கியும் 3.5 டன் எடை கொண்டவை.

பழங்கால பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய சட்டவிரோத சந்தையில் இத்தகைய பீரங்கிகளுக்கு நல்ல மதிப்பு உண்டு. இதையடுத்து கோட்டையில் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அந்த பாதுகாவலர்களையும் தாண்டி, சில நாட்களுக்கு முன்பு கொள்ளை கும்பலால் ஒரு பீரங்கி திருடி செல்லப்பட்டது.

கோட்டையின் பின்புறம் வழியாக வந்த கொள்ளை கும்பல், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை துப்பாக்கி முனையில் காட்டி மிரட்டி பீரங்கியை லாரியில் ஏற்றி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

கோட்டையை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் பீரங்கியை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பீரங்கியை ஏற்றி சென்ற லாரி ராஜஸ்தானுக்கு சென்றது கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பழமையான பொருட்களை கடத்தும் கும்பலுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்றும், கொள்ளை கும்பல் பீரங்கியை மண்ணில் புதைத்து வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பீரங்கியை கண்டறிவதற்காக ராஜஸ்தானின் கரவுலி மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர். சந்தேகிக்கப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கிறது.

பரத்பூரில் இருந்து ஒரு உலோக கண்டறிதல் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்து, மின்னணு கருவிகள் மூலம் நிலத்தை ஆய்வு செய்து வருகிறது. ஜே.சி.பி. எந்திரங்களை பயன்படுத்தி பல இடங்களில் மண்ணை தோண்டி தேடும் முயற்சியும் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com