அசாம் வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு, 5.64 லட்சம் பேர் பாதிப்பு

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் பார்வையிட இருப்பதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
Assam Floods
Published on

அசாமில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைந்தது; இதில் மேலும் 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 16 மாவட்டங்களில் 5.64 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மிக மோசமாக பாதிக்கப்பட்ட சிவசாகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன; அதைத் தொடர்ந்து சாரைடியோவில் 5 பேரும், கோலாகாட்டில் 2 பேரும், ஜோர்ஹட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

சமூக வலைதள பதிவு:

இந்த உயிரிழப்புகளுடன் சேர்த்து, மாநிலத்தில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக, மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட இருப்பதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

"ஆற்றுப் படுகையின் மேல் பகுதிகளில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக உருவான சமீபத்திய அசாம் வெள்ளம் எங்கள் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காக, சாரைடியோ, நசிரா, சிவசாகர், சோனாரி, ஜோர்ஹட் மற்றும் டியோக் ஆகிய இடங்களில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களை நான் பார்வையிடவுள்ளேன்" என்று அவர் சமூக வலைதள பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

5.64 லட்சம் பேர் பாதிப்பு:

கோலாகாட், காம்ரூப், ஹோஜாய், திப்ருகார், பிஸ்வநாத், தேமாஜி, சோனித்பூர், உதல்குரி, நாகான், சாரைடியோ, காம்ரூப் (மெட்ரோ), ஜோர்ஹட், டின்சுகியா, கார்பி ஆங்லாங், லக்கிம்பூர் மற்றும் சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 5,64,600-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்களன்று 15 மாவட்டங்களில் 3.63 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

44 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 872 கிராமங்கள் தொடர்ந்து வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சிவசாகரில் மொத்தம் 3,59,535 பேரும், அதைத் தொடர்ந்து ஜோர்ஹட்டில் 87,662 பேரும், சாரைடியோவில் 72,646 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள்:

இடம்பெயர்ந்த 12,284 பேர் தங்கியுள்ள 71 நிவாரண முகாம்களும், 202 நிவாரண பொருட்கள் விநியோக மையங்களும் தற்போது செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மூலம் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்ததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com