இந்தியாவின் 20 செயற்கைக்கோள்கள் விண்வெளிப் பொருட்களுடன் மோதும் அபாயம்: மத்திய அரசு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 2026-ம் ஆண்டில் இதுவரை 9 செயற்கைக்கோளின் மோதலை தவிர்த்துள்ளது.
satellites in low earth orbit
satellites in low earth orbit
Published on

குறைந்த புவி சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) செயல்படும் 22 இந்திய செயற்கைக்கோள்களில் 20 செயற்கைக்கோள்கள் விண்வெளி பொருட்களுடன் மோதும் அதிக அபாயத்தில் உள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இப்பகுதியில் விண்வெளிப் பொருட்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், குறைந்த புவிப்பாதையில் (2,000 கி.மீ-க்கும் குறைவான உயரத்தில்) இயங்கும் செயற்கைக்கோள்கள் மோதல் அபாயத்திற்கு அதிகம் உள்ளாகின்றன என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

2026-ஆம் ஆண்டில் இதுவரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒன்பது முறை மோதலைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை (collision avoidance manoeuvres) மேற்கொண்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20-ஆக இருந்தது.

மோதலைத் தவிர்க்கும் நடவடிக்கை என்பது மற்றொரு பொருள் அல்லது விண்வெளி குப்பைகளுடன் (space debris) விண்வெளியில் மோதல் ஏற்படுவதைத் தடுக்க, செயற்கைக்கோள் இயக்குபவரால் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதை மாற்றமாகும்.

விண்வெளி குப்பை மேலாண்மை தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகளான 'இன்டர்-ஏஜென்சி டெப்ரிஸ் கோஆர்டினேஷன் கமிட்டி' (IADC) மற்றும் 'நீண்ட கால நிலைத்தன்மைக்கான ஐக்கிய நாடுகள் பணிக்குழு' (UN-LTS) ஆகியவற்றில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.

திருத்தப்பட்ட IADC விண்வெளி குப்பை குறைப்பு வழிகாட்டுதல்களுக்கு இஸ்ரோ கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் தனது கருத்துகளையும் வழங்கியுள்ளது.

விண்வெளி குப்பைகளைக் குறைப்பதற்கான தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, குப்பைகளற்ற விண்வெளிப் பணி (Debris Free Space Mission) முன்னெடுப்பிற்கான இந்தியாவின் நோக்கம் 2024-இல் அறிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் அரசு மற்றும் தனியார் என அனைத்து இந்தியத் தரப்பினராலும் பூஜ்ஜிய குப்பை (zero debris) என்ற இலக்கை அடைவதே இஸ்ரோவின் நோக்கம்.

இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

4 ஆயிரம் கிலோ எடைகொண்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் ஒரு பகுதி நிலாவில் மோத உள்ளது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com