

சென்னை:
8-வது தேசிய மாற்றுத்திறனாளிகள் (பாராலிம்பிக்) கைப்பந்து மற்றும் 12-வது தேசிய மாற்றுத்திறனாளிகள் வீல்சேர் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
இந்திய பாராலிம்பிக் கைப்பந்து சம்மேளனம் மற்றும் இந்திய பாராலிம்பிக் வாள் சண்டை சம்மேளனம் சார்பில் இந்த போட்டிகள் நடக்கிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அரியானா உள்பட 20 மாநிலங்களில் இருந்து 525 மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த போட்டியின் அடிப்படையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச பாராலிம்பிக் கைப்பந்து போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும். மேற்கண்ட தகவலை இந்திய பாராலிம்பிக் கைப்பந்து சம்மேளன தலைவர் எச்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.