தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அரும்பாக்கத்தில் இருந்து சேப்பாக்கத்திற்கு இடமாற்றம்

தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், அரும்பாக்கத்தில் இருந்து சேப்பாக்கம் கலச மஹாலுக்கு 27-ந் தேதி இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அரும்பாக்கத்தில் இருந்து சேப்பாக்கத்திற்கு இடமாற்றம்
Published on

சென்னை:

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல தீர்ப்பாயம் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னை அரும்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட மாநில வழக்குகளை விசாரிக்கும் இந்தத் தீர்ப்பாயம் அமைந்துள்ள கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லை.

எனவே இதற்காக சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள ‘கலச மஹால்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் தரைதளம், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

‘கலச மஹால் 1768-ம் ஆண்டு, இந்தோசார்சனிக் கட்டிடக் கலையில் அமைக்கப்பட்டதாகும். தீயில் சேதமான இந்தக் கட்டிடம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தக் கட்டிடத்தை தீர்ப்பாயத்துக்காக தயார்படுத்தும் பணி நடந்து வந்தது. தற்போது தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தை 27-ம் தேதியன்று கலச மஹாலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதல் அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி கூறியதாவது:-

கலச மஹாலுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் மாற்றப்படும் நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், ஐகோர்ட்டு நீதிபதிகள், முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்த்ரகுமார் கலந்து கொள்கிறார்கள்.

அன்று சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கமும் நடைபெறும். தற்போது 2 அமர்வுகள் உள்ளன. மூன்றாம் அமர்வும் அமைவதற்கு கலச மஹாலில் இடம் உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு 3-ம் அமர்வு செயல்படத் தொடங்கும். அதில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் இழப்பீட்டு ஆணைய வழக்குகளும் விசாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com