

மும்பை:
பிரதமர் மோடி அறிவித்த சவுபாக்யா திட்டம், ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொன்டு வரப்பட்ட திட்டம் தான் என தேசிய காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையில் சரத் பவாரின் தேசிய காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பழைய திட்டத்துக்கு புது பெயரை சூட்டி அறிமுகம் செய்துள்ளார். மோடி அறிமுகப்படுத்தியுள்ள சவுபாக்யா என்ற திட்டம், கடந்த 2005-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கொண்டு வந்த ராஜீவ் காந்தி கிராமின் வித்யுத் யோஜனா திட்டமாகும். 2013, ஜனவரி 31-ம் தேதிக்குள் சுமார் 2 கோடியே 5 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளில் மின்சார இணைப்பு பெறும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் ஆகியவை மக்களிடம் எடுபடவில்லை. தங்கம் சேமிப்பு குறித்த திட்டமும் தோற்றுவிட்டது. எனவே, மோடியின் அரசு முந்தைய அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களுக்கு புதிய பெயரை சூட்டி புது திட்டமாக அறிவித்து வருகிறது என குற்றம் சாட்டி பேசினார்.