

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார். அதன்பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆனார். ஆனால், கட்சி மற்றும் ஆட்சியில் பதவி வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். அதற்கு காரணமானவர்களை அம்மாவின் ஆன்மா சும்மா விடவில்லை. தற்போது அவர்கள் சிறையில் இருக்கிறார்கள். சசிகலாவை ஒருபோதும் அரசியலுக்கு கொண்டுவர ஜெயலலிதா நினைத்தது இல்லை.
அ.தி.மு.க.வை இணைக்க குழு அமைக்கப்பட்டது. ஆனால், இணைப்பை செயல்படுத்த முடியவில்லை. அதற்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் தான் காரணம். 2 பேரும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தால் சசிகலா அணி காணாமல் போய்விடும். ஜெயலலிதா மரணத்துக்கு நீதிவிசாரணை, சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் எளிதாக பிரச்சினைகளை தீர்க்கலாம். எனவே, 2 கோரிக்கைகளையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அ.தி.மு.க. இணைப்பு நடந்து விட்டால், சசிகலாவால் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருக்கும் பதவி போய்விடும் என்ற பயம். எனவே, பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கின்றனர். இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடத்துவது அவர்கள் கையில் தான் இருக்கிறது. ஜெயலலிதாவால் முதல்-அமைச்சராக அடையாளம் காண்பிக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அப்படி என்றால் அவர் தானே, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு. இது ஜெயலலிதா உருவாக்கிய அரசு. ஆனால், சசிகலா விரும்பிய நபர் முதல்-அமைச்சராக இருப்பதால், சசிகலா அரசாகி விட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா அரசு அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முன்னாள் மாவட்ட செயலாளர் குப்புசாமி, நத்தம் தொகுதி முன்னாள் செயலாளர் கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்புரத்தினம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் லோகநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி யூசுப் அன்சாரி, தெற்கு பகுதி துணை செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, ராஜகண்ணப்பன், பாண்டியராஜன், முனுசாமி, ஜெயபால், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் எம்.பிக்கள் மனோஜ் பாண்டியன், பிரபாகரன், சாணார்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் இன்பஜோதி சுப்பிரமணி, செல்வராஜ், சுப்பிரமணி, ஜெயலட்சுமி கல்யாண சுந்தரம், மகாலட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் அம்மன் பேங்கர்ஸ் மாதவன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பழனிவேல், ஒட்டன்சத்திரம் ஒன்றிய மாணவரணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் செல்லத்துரை, மீனவரணி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், வடமதுரை முன்னாள் சேர்மன் ராஜசேகர், வேடசந்தூர் தொகுதி முன்னாள் இணை செயலாளர் ராஜ்மோகன், வேடசந்தூர் ஒன்றிய நிர்வாகிகள் சிவலிங்கம், அன்னபூர்ணா நெடுஞ்செழியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் திருமாறன் நன்றி கூறினர்.