வெளியேறிய 6 அமைச்சர்களையும் உடனே நீக்குங்கள்- ஆளுநருக்கு கமல் நாத் பரிந்துரை

ஜோதிராதித்ய சிந்தியாவின் அணியில் உள்ள 6 அமைச்சர்களையும் அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி ஆளுநருக்கு கமல் நாத் கடிதம் எழுதி உள்ளார்.
கமல் நாத்துடன் ஜோதிராதித்ய சிந்தியா
கமல் நாத்துடன் ஜோதிராதித்ய சிந்தியா
Published on

போபால்:

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே ஏற்பட்ட மோதல் பூதாகரமாக வெடித்தது. இந்த மோதலின் உச்சகட்டமாக காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா விலகினார். ஆனால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவரை கட்சியில் இருந்து  நீக்கி தலைமை உத்தரவிட்டது.

அதன்பின்னர் சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் இன்று ராஜினாமா செய்தனர். அவர்கள் ஆளுநருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். 19 பேர் ஒட்டுமொத்தமாக விலகியதால், கமல் நாத் தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராஜினாமா செய்த 6 அமைச்சர்களையும் மத்திய பிரதேச அமைச்சரவையில் இருந்து நீக்கும்படி முதல்வர் கமல்நாத் பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆளுநர் லால்ஜி தாண்டனுக்கு அவசர கடிதம் அனுப்பி உள்ளார். 

அதில், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிந்தியாவின் அணியில் உள்ள அமைச்சர்கள் இமராதி தேவி, துளசி சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், மகேந்திர சிங் சிசோடியா, பிரத்யும் சிங் டோமர் மற்றும் பிரபுராம் சவுதாரி ஆகியோரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து  நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com