

சென்னை:
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவரது சிறுநீரகமும், கல்லீரலும் செயல் இழந்தது தெரிய வந்தது. எனவே அவருக்கு மாற்று சிறுநீரகம், கல்லீரல் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினார்கள்.
இதையடுத்து விபத்தில் மூளைச்சாவு அடைந்த அறந்தாங்கி வாலிபர் கார்த்திக்கின் சிறுநீரகம், கல்லீரல் தானமாக பெறப்பட்டு நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இதற்காக வாலிபர் கார்த்திக்கின் உடல் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின் நடராஜன் மிக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். ‘‘வெண்டிலேட்டர்’’ எனப்படும் உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு உயர்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்துக்குப்பின் நடராஜன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், சிறுநீரகம், கல்லீரல் சீராக இயங்குகிறது என்றும் குளோபல் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பெறப்பட்ட சிறுநீரகம், கல்லீரலை நடராஜன் உடல் ஏற்றுக் கொண்டு விட்டது. மூச்சுக் குழாயில் துளையிடப்பட்டு குழாய் மூலம் வெண்டி லேட்டருடன் இணைக்கப் பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களுக்கு அவரது உடல் நிலை நன்கு தேறும் வரை வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சை நீடிக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.