நடராஜன் உடல்நிலை மோசம்: உறவினரின் கல்லீரலை பொருத்த முடிவு

நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் அவரது உறவினரின் கல்லீரலை தானமாக பெற்று பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நடராஜன் உடல்நிலை மோசம்: உறவினரின் கல்லீரலை பொருத்த முடிவு
Published on

சென்னை:

அ.தி.மு.க. அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான எம்.நடராஜன் (74) கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

கடந்த 10-ந்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல், சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறுநீரகம் செயலிழந்ததால் அவருக்கு ‘டயாலிசிஸ்’ செய்யப்படுகிறது.

நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் கல்லீரல், சிறுநீரகம் வேண்டி தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வரையில் உறுப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. பிரபல கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா தலைமையிலான குழுவினர் நடராஜனை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று அவருக்கு பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் இன்று முடிவு செய்கிறார்கள். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய நடராஜன் உடல் தகுதியாக உள்ளதா? என்று டாக்டர்களிடம் ஆலோசனை பெறப்படுகிறது. இன்று மாலை இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதால் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com