ரூ.5.5 லட்சம் கோடியில் 60 முக்கிய நதிகளை இணைக்கும் திட்டம்: பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்

நாட்டின் 60 முக்கிய நதிகளை ரூ.5.5 லட்சம் கோடியில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்.
ரூ.5.5 லட்சம் கோடியில் 60 முக்கிய நதிகளை இணைக்கும் திட்டம்: பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
Published on

புதுடெல்லி:

கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் வடமாநிலங்கள் வெள்ளத்தாலும், தென்மாநிலங்கள் வறட்சியாலும் தவித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதும், தமிழகம் தண்ணீருக்காக தவிப்பதும் வாடிக்கையாக இருந்துவருகிறது. நதிகள் இணைப்பால், வெள்ளம் வரும் காலத்தில் வறட்சிப் பகுதிகளுக்கு தண்ணீரைத் திருப்ப முடியும். இதனால், வெள்ளம் ஏற்படாமல் தவிர்க்கப்படுவதோடு வறட்சி குறைந்து விவசாயம் செழிக்கும் வாய்ப்பும் அதிகம் என கூறப்படுகிறது.

நதிகளை இணைப்பதால், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படும் என்று எதிர்ப்பும் கிளம்புகிறது. சுற்றுச்சூழல், புலி ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் அரச குடும்பத்தினரின் எதிப்பையும் மீறி இந்த திட்டமானது நிறைவேற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நாட்டின் மிகப்பெரிய நதிகளை இணைக்க 87 பில்லியன் டாலர் (5,55,016 கோடி ரூபாய்) திட்டம் ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான ஆய்வு பணிகளை இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த மெகா திட்டத்தில் சுமார் 60 ஆறுகள் இணைக்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டமாக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தர்ப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் ஓடும் கர்னாவதி-பெட்வா நதிகளை இணைக்கும் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது.

கர்னாவதி ஆற்றில் அணை கட்டப்பட்டு, அங்கிருந்து 22 கீ.மி. தொலைவுக்கு கால்வாய் வெட்டி, பெட்வா நதிக்குத் தண்ணீர் கொண்டுசெல்லப்பட உள்ளது.

குஜராத், மராட்டிய மாநிலத்தில் ஓடும் நர்மதா, பர்தாபி நதிகளும் இணைக்கப்பட உள்ளன. இதே மாநிலங்களில் ஓடும் தாமன் கங்கா நதியை, பிஞ்சால் நதியுடன் இணைக்கும் முதல் கட்ட ஆய்வுப்பணிகள் முடிந்து விட்டன. இதற்கு ரூ.2,764 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கர்னாவதி-பெட்வா திட்டம் மற்ற நதி ஒருங்கிணைப்பு திட்டங்களுக்கு முன்மாதிரியாக அமையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர், புதுடெல்லியில் இருந்து சுமார் 805 கீ.மி. தூரத்திலான கட்டுமான பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com