நன்னிலம் அருகே விடுப்பில் வந்த கைதி மனைவியுடன் தற்கொலை

நன்னிலம் அருகே விடுப்பில் சிறையில் இருந்து வந்த கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
நன்னிலம் அருகே விடுப்பில் வந்த கைதி மனைவியுடன் தற்கொலை
Published on

பேரளம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நடுவச்சேரி அடுத்த விசலூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சாமிநாதன் (வயது 38). இவரது மனைவி சரசுவதி (33). இவர்களுக்கு ஸ்ரீஹரி(13), சந்தோஷ் (11) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டில் அப்பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் சாமி நாதனை நன்னிலம் போலீசார் கைது செய்தனர். மேலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சாமிநாதன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்து வந்தார்.

இதற்கிடையே சாமிநாதனின் அண்ணன் தண்டபாணியின் புதுவீடு கிரக பிரவேச நிகழ்ச்சி கடந்த 14-ந் தேதி நடந்தது. இதனால் 13-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு சிறையில் இருந்து விடுப்பில் சாமிநாதன் வந்தார்.

பின்னர் அண்ணன் வீட்டின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் தனது வீட்டுக்கு மனைவி, குழந்தைகளுடன் திரும்பினார்.

நேற்று இரவு விசலூரில் உள்ள வீட்டில் சாமிநாதன் இருந்தார். அப்போது கூரைவீட்டின் வெளியே சாமிநாதனின் தந்தை மணி, தாய் பானுமதி ஆகியோர் படுத்து இருந்தனர். சாமிநாதன் தனது மனைவி , குழந்தைகளுடன் வீட்டின் உள்ளே படுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வீட்டில் படுத்து இருந்த சாமிநாதன் கண்விழித்தார். பின்னர் அவரும், மனைவி சரசுவதியும் கூரைவீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலையில் தந்தை மணி எழுந்து வந்து பார்த்த போது சாமிநாதன், சரசுவதி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் பிரகாசுக்கு தகவல் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

தற்கொலை செய்து கொண்ட கணவன்- மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

சாமிநாதன், மனைவியுடன் சேர்ந்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி நன்னிலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறையில் இருந்து வந்த கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நன்னிலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com