நன்னிலம் அருகே ரெயில் முன்பாய்ந்து காதலன் தற்கொலை

நன்னிலம் அருகே காதலை கைவிடுமாறு தாய் கூறியதால் ரெயில் முன்பாய்ந்து காதலன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம் அருகே ரெயில் முன்பாய்ந்து காதலன் தற்கொலை
Published on

தஞ்சாவூர்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே செருகுடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் நவீன்ராஜா (வயது 23), பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் இவரும் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்பிரியாவும் (21) கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நவீனின் தந்தை சுப்பிரமணியன் இறந்துள்ளார். இதையடுத்து நவீனின் தாய் விஜயா காதலை கைவிட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் காதலை கைவிட்டுவிட்டு வேலைக்கு போக முடிவு செய்தார்.

இதையடுத்து தன் காதலி தமிழ்பிரியாவிடம் எனது தந்தை இறந்துவிட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டியுள்ளது. என்னால் தற்போது இருக்கும் நிலையில் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே உங்கள் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த தமிழ்பிரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கிகிடந்துள்ளார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தந்தை இறந்து விட்டதாலும், காதலியும் வி‌ஷம் குடித்ததாலும் மனமுடைந்த நவீன்ராஜா நேற்று முன்தினம் நண்பரின் திருமண வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு நன்னிலம் அருகே உள்ள கோவில்வெண்ணி பகுதி ரெயில்வே நிலையத்திற்கு வந்தார். அவர் அங்குள்ள பிளாட்பாரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து அழுதுள்ளார். பின்னர் அந்த வழியாக வந்த ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் அவரது உடல் துண்டு துண்டாக சிதறியது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்பேரில் தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிதறிக்கிடந்த உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com